விகடன் முன்னாள் தலைமை புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவு - முதலமைச்சர் இரங்கல்!

விகடன் முன்னாள் தலைமைப் புகைப்பட கலைஞர் சு.குமரேசன் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த புகைப்படப் பத்திரிகையாளர். விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் திரு. சு. குமரேசன் அவர்கள் நேற்றிரவு மறைவெய்தினார் என்று அறிந்து வருந்துகிறேன். திராவிட இயக்க மேடைகளில் பகுத்தறிவு ஒளிவீசிய மகா மதுரகவி வி.வே.முருகேச பாகவதர் அவர்களின் பெயரனான குமரேசன் அவர்கள், விகடன் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். கடந்த வாரம்தான் பூர்வீகக் குடிகளின் பாவலர் முருகேச பாகவதர் படைப்பு நூலுக்கு எனது வாழ்த்துச் செய்தியை பெற்றுச் சென்றார்.
விகடன் முன்னாள் தலைமைப் புகைப்படக் கலைஞர் திரு.சு.குமரேசன் அவர்கள் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/EkMT9Cyxmg
— TN DIPR (@TNDIPRNEWS) November 9, 2023
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்று பக்கங்கள் பலவற்றை தனது புகைப்படக் கருவியின் வாயிலாகப் பதிவு செய்தவர். தலைவர் கலைஞர். நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பதிவு செய்தவர். குமரேசன் அவர்களது திடீர் மறைவு புகைப்பட இதழியல் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்லையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.