திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 
stalin stalin

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 10-ம் தேதி முதல், 19-ம் தேதி வரை திருமலையில் பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், திருப்பதியின் விஷ்ணு நிவாஸம் பகுதியில் நடைபெற்ற இலவச டோக்கன் விநியோகத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறு பக்தர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் ஒருவர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட திருப்பதியில் நடந்த சோகமான சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.