பட்டுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, தாமரங்கோட்டை தெற்கு கிராமம், கரிசல்காடு கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், தாமரங்கோட்டை தெற்கு கிராமம், கரிசல்காடு கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.11.2024) மாலை சுமார் 5.00 மணியளவில் திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த 42 நபர்கள் TN49 BU 8647 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடம் கிராமத்தில் விவசாய நடவுப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக வாகனத்தின் சக்கரம் வெடித்ததில் மேற்படி வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த திருமதி.துர்கையம்மாள் (வயது 60) க/பெ.சுப்பரமணியன் என்ற என்ற பெண்மணி பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையுமடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து அதிராம்பட்டிணம், பட்டுகோட்டை. தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 41 நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். எனது ஆழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.