3 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் சந்திப்பு..
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டு ஒன் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெறவுள்ளது. இதனையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் திமுக அண்மையில் மதுரையில் நடத்திய பொதுக்குழுவில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்குடன் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அப்போது ‘உடன்பிறப்பே வா’என்னும் பெயரில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஒன் டு ஒன் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி கடந்த 13ஆம் தேதி முதல் சந்திப்பு தொடங்கியது. அன்றைய தினம் சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளை சேர்ந்த ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
இந்த நிலையில் இன்றிலிருந்து 20ஆம் தேதி வரை 12 சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திக்க உள்ளார். இன்றைய தினம் பரமத்திவேலூர், கவுண்டம்பாளையம், பரமக்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கைநழுவிய 75 தொகுதிகளையும், சற்று வீக்கான சூழலில் உள்ள 100 தொகுதிகள் என 100 இடங்களை குறிவைத்து அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


