பட்டுத்தொழிலில் சிறந்து விளங்கிய 9 பேருக்கு பரிசு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 
mk stalin

மாநில அளவில் பட்டுத்தொழிலில் சிறந்து விளங்கிய 9 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6 லட்சம் ரொக்க பரிசு வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் பட்டுவளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையில், மாநிலத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவில் சிறந்த 3 பட்டு விவசாயிகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே 25 ஆயிரம், 20 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கவும், மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே ரூ.1 லட்சம், 75 ஆயிரம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பரிசுகள் வழங்கவும் 24 லட்சத்து 45 ஆயிரம் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி, பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்டம் வாரியாக மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும், மூன்று சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். 

மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கருக்கு வழங்கப்பட்டது. மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயக்கான பரிசுத் தொகையை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முரளிகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

மாநில அளவில் சிறந்த பலமுனை பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயவேல், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்ராஜ், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத்தொகையை தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேதவள்ளி என மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை 9 விருதாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் விஜயா ராணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 இவ்வாறு தெரிவித்தார்.