பள்ளி மாணவர்கள் படிகளில் பயணிப்பதை தடுக்க MTC பேருந்துகளில் மூடும் கதவு- அமைச்சர் சிவசங்கர்

 
bus

மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை பட்டினம்பாக்கம் பணிமனை திறந்து வைத்தும், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். 

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், “இந்த ஆண்டு 100 பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இன்னும் இரண்டு மாதத்திற்குள் மீதம் இருக்கக்கூடிய 1668 பேருந்துகளும்  ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் வாங்கப்பட உள்ள பேருந்துகளும் நான்கு ஐந்து மாதங்களில் படிப்படியாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் கூடுதல் வசதிகள் செய்து தர சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு என்ன வசதி வேண்டுமோ அது செய்து கொடுக்கப்படும்.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு முனையத்தில் இருந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது தங்களது வேண்டுகோள். அரசு பேருந்து போக்குவரத்து கழகம் முழுமையாக பேருந்துகளை இயக்கும் பொழுது ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். எம்.டி.சி. பேருந்துகளில் வருகிறது புதிய மாற்றம் வருகிறது. பள்ளி மாணவர்கள் படிகளில் பயணிப்பதை தடுக்க MTC பேருந்துகளில் மூடும் கதவு அமைக்கப்படவுள்ளது.

அரசு சார்பில் தொழிற்சங்கத்தினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எல்லா கோரிக்கைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்கள் பணிக்கு வருகிறார்கள், மற்றவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். ஓட்டுநர் நடத்துநர் பணிகளுக்கு தான் அதிக அளவில் காலி பணியிடங்கள் இருக்கிறது. அந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அடுத்த மாதத்திற்குள் 100 புதிய MTC பேருந்துகள் வாங்கபட உள்ளது. எலக்ட்ரிக் பேருந்துகள் 100 வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது” என்றார்.