மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.. ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போவதாக முழக்கம்..
திருச்செந்தூர் அருகே கள் இறக்கும் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைமரம் ஏறி கள் இறக்கினார்.
திருச்செந்தூர் அருகே பெரியதாழை பகுதியில் கள் இறக்க அனுமதி கோரி நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்தில் பனைமர தொழிலாளர்களுடன் , நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ண்டனர். அப்போது அப்போது சீமான் 22 அடி உயர பனைமரத்தில் ஏறி கள் இறக்கினார்.
சீமான் மரத்தில் ஏறி கள் இறக்கிக் கொண்டிருந்த போது, கீழே, கள் இறக்க விதித்த தடையை அகற்ற வேண்டும் என்றும், கள் எங்கள் உரிமை.. கள் எங்கள் உணவு என்று நாம் தமிழர் கட்சியில் முழக்கமிட்டனர். கள் இறக்கிவிட்டு கீழே இறங்கி வந்த சீமான், பனை ஓலையில் கள் ஊற்றி கட்சியினருக்கு வழங்கினார்.

தொடர்ந்து அங்கிருந்த கட்சியினர், தொண்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே உரையாற்றிய சீமான், “பனை எனது தேசிய மரம்.. அதனை நான் இழக்க முடியாது. பனை அதை நினை.. தாயை போல் கட்டி அணை.. 840 பயன்களை தருகிற உலக உயிர் பனை மரம் தான். பனக்கள்ளை சாராயம் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் விற்பதற்கு பெயர் என்ன.. கள்ளை நஞ்சு என்று சொன்னால், அரசு நடத்தும் டாஸ்மாக்குகளில் விற்பது என்ன கோவிலில் கொடுக்கின்ற புனித நீரா..
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கள்ளுக்கு தடை இல்லை.. ஆனால் இங்கு மட்டும் ஏன் கள் இறக்க தடை.. ஏனென்றால் வேறு எங்கும் சரக்கு விற்பவர்கள் ஆளவில்லை. இங்கு மட்டும் தான் இப்படி ஆள்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகின்ற சரக்கு.. இவர்கள் காய்க்கின்ற சரக்கு. தமிழகத்தில் சாராயத்தை காய்ச்சுபவர்களும், விற்பவர்களும் ஒரே ஆளாக இருக்கிறார்கள். கள் குடிப்பவர்கள் 3 லிட்டர் தான் அதிகம் குடிக்க முடியும்.

அதோடு அவன் போதும் என்று சொல்லிவிடுவான். 100 ரூபாய்க்குள் போய்விடும். ஆனால் இதோடு நீ போக கூடாது என்பதற்காக டாஸ்மாக்குகளை திறந்து குடித்துவிட்டு போங்க.. பொண்டாட்டியை அடிங்க.. போய் தகராறு செய்யுங்க என்று டாஸ்மாக்குக்களை திறந்து இருக்கிறார்கள். அப்பா சொல்கிறேன்.. இளைஞர்கள் யாரும் போதையில் செல்லாதீர்கள் என்று சொல்கிறார்.. ஆனால் அவரே தான் டாஸ்மாக்குகளை திறந்து வைத்திருக்கிறார்.” என்றார்.
மேலும், ஆடு மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு இடம் கிடையாது. கால்நடைகள் மேய்ச்சலுக்கு வனத்தில் தடை. குவாரி என்கிற பெயரில் மலையை வெட்டி விற்பதற்காக, வன பாதுகாப்புச் சட்டம் என மலையடிவாரத்தில் ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு தடை விதித்துள்ளனர். ஆடு, மாடுகள் மேய்ப்பவர்களை அவமானப்படுத்தி வழக்கு போடுகிறார்கள். ஆகையால் நான் ஆடு, மாடுகளின் மாநாடு நடத்தப்போகிறேன். இதற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால், நானே 2 ஆயிரம், மூவாயிரம் ஆடு, மாடுகளை திரட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு கொண்டு செல்வேன். யார் குறுக்கே வருகிறார்கள் என்று பார்ப்போம்.” என்றும் கூறினார்.


