கழிப்பிடத்தில் தங்கவைக்கப்பட்ட தொழிலாளர்கள்! அங்கேயே சமைத்து, சாப்பிட்டு, உறங்கிய கொடுமை

 
அஃப்

திருப்பூரில் துப்புரவு பணி செய்ய வந்த வடமாநில தொழிலாளர்களை கழிவறைக்குள் உள்ள தனி அறையில் தங்க வைத்ததாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள பொதுகழிப்பிடத்தில் துப்புரவு பணியை செய்ய வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 4 பேரை கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தனியே தங்க வைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் கடந்த ஒரு மாதமாக அங்கேயே தங்கி உணவு சமைத்து, உண்டு பணி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஒரு நபர் உள்ளே சென்று எடுத்த வீடியோ, தற்பொழுது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அவர்களை வெளியேற்றி உள்ளனர். துர்நாற்றம் வீசும் கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தொழிலாளர்களை தங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பவன் குமார் இடம் கேட்டபோது, மாநகராட்சி பகுதியில் உள்ள மூன்று பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணிக்காக ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. அந்த நிறுவனமே தொழிலாளர்களை இந்த கழிவறையில் தங்க வைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.