2 கைகளையும் இழந்த 10-ம் வகுப்பு மாணவர் பள்ளியில் முதலிடம்

 
கவி

2 கைகளை இழந்த 10ம் வகுப்பு மாணவர், பள்ளியளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு க்ரித்தி வர்மா என்ற மகன் உள்ளார். மகன் க்ரித்தி வர்மா நான்கு வயது இருக்கும் பொழுது வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டியவாறு மின்கம்பத்திலிருந்து சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி க்ரித்தி வர்மா தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார்.

மகனின் இந்த நிலையை கண்ட அருள்மூர்த்தி வீட்டை விட்டு சென்ற நிலையில், சோக்காடி கிராமத்தில் எந்தவித ஆதரவும் இல்லாததால் கஸ்தூரி தனது இரண்டு கைகள் இல்லாத மகனுடன் தனது சொந்த ஊரான ஜீனூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்து வருகிறார். இரண்டு கைகளும் இல்லை என்றாலும் தன்னம்பிக்கையை கைவிடாத க்ரித்தி வர்மா எட்டாம் வகுப்பு வரை மிக நன்றாக படித்ததுடன், ஓவியம் வரைதல், தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்வது என தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துள்ளார்.

இதனை பார்த்து ஆச்சரியமடைந்த இவரது ஆசிரியர் ஆனந்தி, க்ரித்தி வர்மாவை நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்ததுடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார். இந்த நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் க்ரித்தி வர்மா, 437 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டு கைகளும் இல்லை, தந்தை ஆதரவும் இல்லை இருந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாத க்ரித்தி வர்மா சிறப்பாக பயின்று பள்ளியளவில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.