பள்ளி முதல்வர் கொடூர கொலை : 27 முறை கத்தியால் குத்திய 10ம் வகுப்பு மாணவர்கள்..!

 
1

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் கொண்டமல்லேபள்ளியில் நாகார்ஜுனா பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி முதல்வரும், இயக்குனருமான கல்லு ரூபா ரெட்டி, கடந்த 12ம் தேதி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

போலீசார் அவரது உடலை மீட்டு, ஐந்து தனிப்படைகள் அமைத்து கடந்த ஒரு வாரமாக விசாரணை நடத்தினர். பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்த 10ம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதில், மாணவர்கள் இருவர் சமீப நாட்களில் அதிக பணம் செலவழித்ததும், நண்பர்களுக்கு விருந்து அளித்ததும் தெரியவந்தது. அந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ரூபா ரெட்டியை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் ஏற்கனவே ரூபா ரெட்டியின் கண்டிப்புக்கு ஆளானவர்கள். விடுதியில் இருவரிடமும் ஆயிரக்கணக்கில் பணமும், மொபைல் போனும் வைத்திருந்ததை ரூபா ரெட்டி கண்டுபிடித்துள்ளார். அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததுடன், அந்த மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றி, வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களாக மாற்றியுள்ளார்.

இதையடுத்து ரூபா ரெட்டி வீட்டில் கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டி உள்ளனர். இதற்காக ஐந்து நாட்கள் வீட்டை நோட்டமிட்டனர். கொள்ளை முயற்சியில் சிக்காமல் இருக்க கையுறை, கத்தி, முகமூடி ஆகியவற்றை வாங்கினர். கொலை நடந்த நாளில், மாணவர்களில் ஒருவர் கையுறைகள் மற்றும் முகத்தை மறைக்கும் தொப்பி அணிந்து வீட்டிற்குள் சென்றுள்ளார். இன்னொருவர் வெளியே இருந்து நோட்டமிட்டுள்ளார். படுக்கையறையில் இருந்த 2.50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அவர் வெளியேற முயன்றபோது, அவரது தொப்பி கீழே விழுந்துள்ளது. அவரை ரூபா ரெட்டி அடையாளம் கண்டுள்ளார். தங்களை போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விடுவார் என அஞ்சிய மாணவர், மற்றொரு மாணவருடன் சேர்ந்து அவரை கத்தியால் 27 முறை குத்திவிட்டு தப்பினர்.

கொள்ளையடிக்க பயன்படுத்திய பொருட்களை புதைத்துவிட்டு கோவாவுக்கு சுற்றுலா சென்று திரும்பி உள்ளனர். கொண்டமல்லேபள்ளியில் உள்ள டோனியாலா கூட்டு சாலையில் நடந்த வாகன சோதனையில் பைக்கில் வந்த இருவரும் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1.54 லட்சம் ரூபாய் ரொக்கம், ஐபோன் மற்றும் கொல்லப்பட்ட பள்ளி முதல்வர் ரூபா ரெட்டியின் மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு போலீசார் கூறினர்.