10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை : மனதை உலுக்கும் 2 பக்க தற்கொலை கடிதம்..!

 
1

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் 15-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

காசியாபாத்தின் விஜயநகர் காவல் எல்லைக்குட்பட்ட 'கௌர் சித்தார்த்தம்' (Gaur Siddhartham) என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசசித்து வந்த 16 வயதான சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை சுமார் 6:45 மணியளவில், இவர் தனது குடியிருப்பின் 15-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார்.

கீழே விழுந்த பலத்த சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பாதுகாப்பு ஊழியர்களும் அக்கம் பக்கத்தினரும், மாணவி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விஜயநகர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

குடும்பத்தினர் வேதனை மற்றும் ஆத்திரம்:

சம்பவ இடத்திற்கு வந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் உயிரிழந்த மகளின் உடலைப் பார்த்துக் கதறித் துடித்தனர். அப்போது அங்கு திரண்ட சிலர் இச்சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் அவர்களைத் தடுத்தனர். பின்னர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சம்பவ இடத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்த காவல்துறையினருக்கு 2 பக்கங்கள் கொண்ட தற்கொலை மொட்டைக்கடிதம் (Suicide Note) கிடைத்துள்ளது. அதில் அம்மாணவி எழுதியிருப்பதாவது:

"என்னைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். என் தற்கொலைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. என் நண்பர்களே, தயவுசெய்து என் நினைவுகளுக்காக உங்களின் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்.

அம்மா-அப்பா... உங்களுக்கு இன்னொரு மகளும் இருக்கிறாள். தயவுசெய்து எனக்காக அவளது எதிர்காலத்தைப் பாழாக்கிவிடாதீர்கள். சித்தி-சித்தப்பா, மாமா-அத்தை மற்றும் பாட்டி நீங்கள் அனைவரும் சந்தோஷமாக இருங்கள். என் தங்கையே, என்னை மன்னித்துவிடு. என்னைப்பற்றி அதிகம் யோசிக்காமல், வாழ்க்கையில் படித்துப் பெரிய ஆளாக வெற்றி பெறு."

மேலும், படிப்பின் அதிகப்படியான மனஅழுத்தம் மற்றும் சுமையைத் தாங்க முடியாமலேயே இந்த முடிவை எடுப்பதாகவும், தன் மரணத்திற்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோத்வாலி உதவி ஆணையர் (ACP) உபாசனா பாண்டே கூறுகையில், "தற்கொலை மொட்டைக்கடிதம் கைப்பற்றப்பட்டு, கையெழுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.