நீதிபதிகளின் கருத்துகள் நீதிமன்ற மாண்புடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம் - தலைமை நீதிபதி சந்திரசூட்..
இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தான் என குறிப்பிடக் கூடாது எனவும், நீதிபதிகளின் கருத்துகள் நீதிமன்றத்தின் மாண்புடன் ஒத்து போக வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வேதவ்யாசாச்சார் ஸ்ரீஷானந்தா தலைமையிலான அமர்வில், கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி இன்சூரன்ஸ் & மோட்டார் வாகன சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பகுதியை பாகிஸ்தான் போல இருப்பதாக தெரிவித்தார். நீதிபதி குறிப்பிட்ட பகுதிகள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளதால் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி ஸ்ரீஷானந்தா தொடர்பான மற்றொரு வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், வழக்கு விசாரணையின் போது, பெண் வழக்கறிஞர் ஒருவரிடம் நீதிபதி அநாகரிகமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் , நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா , பி.ஆர் கவாய் , சூரியகாந்த் , ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஏற்கனவே நீதிபதியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது., அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி சந்திர சூட், “இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என அடையாளப்படுத்தக் கூடாது, அப்படி அழைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரானது. பாலினம் சார்ந்த கருத்துகளை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் வெளியிடும்போது அது சமூகத்தில் ஆணாதிக்க, பெண் வெறுப்புக் கருத்தாக பிரதிபலிக்க வாய்ப்பு உள்ளது எனவே, அதில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதில் சமூக ஊடகங்கள் அதிக பங்கு வகிக்கும் பட்சத்தில் நீதிபதிகளின் கருத்துக்கள் நீதிமன்றத்தின் மாண்புடன் ஒத்துப்போக வேண்டியது அவசியம் ” என்று தெரிவித்தார்.