இன்று சித்ரா பௌர்ணமி : பாவம் தீர்ந்து புண்ணியம் அதிகரிக்க இன்று இதை மறக்காம செய்யுங்க..!

 
1

புராணங்களில் சித்ரகுப்தன் பிறந்தநாள் சித்ரா பௌர்ணமி என்கிறது. நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

தமிழ் வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்திரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது.

ஓர் அழகான ஓவியத்தை ரசித்து மகிழ்ந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இந்த ஓவியத்தை உயிர்ப்பித்துதாருங்கள் என வேண்டினார். சிவனும் தன் மூச்சுக்காற்றால் உயிர்ப்பித்துக் கொடுத்தார். சித்திரம் மூலம் சித்ராபௌர்ணமியன்று பிறந்ததால் அவர் சித்திரகுப்தன் என்றழைக்கப்பட்டார். அவரே எமதர்மராஜரிடம், பாவபுண்ணியக்கணக்கு எழுதும் எழுத்தராக பணியாற்றுபவர் என்கிறது புராணம்.

இந்திரன் பாபவிமோசனம் வேண்டி அனைத்து சிவஸ்தலங்களையும் சென்று வணங்கி வரும் நிலையில், மதுரை சொக்கநாரைத் தரிசித்து பாவ விமோசனம் பெற்ற புண்ணிய நாள் சித்ராபௌர்ணமி அன்று தான் எனவும், சீதாராமர் வனவாசம் முடிந்து நகருக்கு திரும்பிய நாள் சித்ரா பௌர்ணமி நாள் எனவும் மதுரை வைகைக்கரையில் கள்ளழகர் எழுந்தருளிய நாள் சித்ராபௌர்ணமி எனவும் புராணங்கள் கூறுகின்றன.

சித்ரா பௌர்ணமியில் பாவ புண்ணியக்கணக்கு எழுதும் சித்திரகுப்தர் வழிபாடு மூலம், மனோசக்தி கூடி பலம் பெறும் அந்த நாளில் மனதை செம்மைபடுத்துகிறார் சித்திரகுப்தர். நிலவு ஒளியில் குடும்பம், உறவுகள் இணைந்து சாப்பிட்டு மகிழ்வதால் மனமகிழ்வும் ஆரோக்கியமும் ஆத்ம பலமும் கூடுகிறது. புதுமணத்தம்பதிகள் தங்களது புது உறவு முறைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த சித்திரைப் பௌர்ணமி தினத்தில் உறவுகளோடு சேர்ந்து நிலாச்சோறு சாப்பிடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டு வந்துள்ளார்கள். இந்த காலத்தைப் போன்று அந்த காலங்களில் எல்லாம், நினைத்த நேரத்தில், நினைத்த சொந்த பந்தங்களை சந்தித்துக் கொள்ள முடியாது அல்லவா? அந்த அளவிற்கு போக்குவரத்து வசதியும் கிடையாது என்பதற்காக இந்த தினத்தை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள்.

நவக்கிரக கேதுவின் தேவதை சித்திரகுப்தர் எனவே கேதுவின் தோஷங்கள், தடைகள் குழப்பங்கள் தீரும் கடன் பிரச்சினைகள் சத்ரு துன்பங்கள் நீங்கி சுலபமாகும். சிவவழிபாடு, கிரிவலம், நவக்கிரகதோஷங்கள்,பாவ விமோஷனம் நீங்குகிறது. புத்திரபாக்கியம் ஏற்படுகிறது திருமணத்தடைகள் நீங்கி திருமணம் நடப்பது, தொழில் தடைகள் நீங்கி தொழில் மேன்மை கிடைக்கிறது. செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிப்பதால் அம்மன் வழிபாட்டால் செவ்வாய் தோஷம் நீக்குகிறது. சந்திரனின் கரகத்துவமான தனம், உடல், மனம் மேன்மையடைகிறது. அன்னைதினம் தாய்க்கிரகம் சந்திரன் அதிபலம் பெறும் இந்த நாள் பெண்கள் தாயையும் தாய் வம்சத்திற்கு செய்ய வேண்டிய ஆகம கடமைகளையும் செய்ய வேண்டிய நாள். மாங்கல்ய பலம் பெறும் நாள்.

சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும். மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். சித்ர குப்த விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது. இதன் மூலம் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் நமது வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தனைக் கூறுவர். ஞானக்காரகனான கேது, புர்வ பண்ணியத்தை நிர்ணயித்து கொடுப்பவர். ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரம், "ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார்" இல்லை என்கிறது. இப்பேர்பட்ட கேது பகவானின் தொல்லையில் இருந்து விடுபட வருடத்திற்கு ஒருமுறையாவது சித்திரகுப்தனை வணங்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.