குழந்தைகளின் ஆரோக்கியம் கேள்விக்குறி! தாய்ப்பாலில் அணுகுண்டுக்கு பயன்படும் கொடிய ‘யுரேனியம்’..!

 
1 1

பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் ஆராய்ச்சி மையம், லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம், நிப்பெர்-ஹாஜிபூர் உள்பட பிற தன்னார்வ குழுக்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியளிக்கும் முடிவுகளை கொண்டிருக்கின்றன. முக்கியமாக, ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து தாய்மார்களின் தாய்ப்பாலிலும் யுரேனியம் கதிராற்றல் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தாய்ப்பாலின் மாதிரியிலும் யுரேனியத்தின் வேதியியல் கூறு ‘U-238’ இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு லிட்டர் தாய்ப்பாலில், 5.25 கிராம் அளவிற்கு யுரேனியத்தின் வீரியம் இருந்துள்ளது. தாய்ப்பாலில் யுரேனியத்திற்கான அனுமதிக்கப்பட்ட வரம்பை எந்த சர்வதேச அமைப்பும் நிர்ணயிக்கவில்லை என்றாலும், பச்சிளம் குழந்தைகளின் ஒரே உணவாக இருக்கும் தாய்ப்பாலில் கொடிய கதிரியக்க உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது குழந்தைகள் பாதுகாப்பின் மீது அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் மாவட்ட வாரியாக வெவ்வேறு யுரேனிய அளவுகளை வெளிப்படுத்தி இருக்கின்றன. கதிஹார் அதிகபட்சமாக லிட்டருக்கு 5.25 கிராம் அளவையும், அதற்கு அடுத்தபடியாக ககாரியா 4.035 கிராம் உடனும், நாளந்தா 2.354 கிராம் யுரேனியம் அளவை தாய்ப்பாலில் கொண்டிருந்தன.

இந்த யுரேனியம் கதிரியக்க கூறுகள் குழந்தைகளை எந்தளவு பாதிக்கலாம் என்பதை அறிய, ஆராய்ச்சியாளர்கள் தாய்ப்பாலின் மூலம் குழந்தைகள் எவ்வளவு யுரேனியத்தை உட்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதை மதிப்பிட்டனர். ‘மான்டே கார்லோ’ நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட அந்த மதிப்பீட்டில், இதே நிலை தொடர்ந்தால் சுமார் 70 விழுக்காடு குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.

தாய்மார்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. பொதுவாக உறுப்புகள் வளரும் பருவத்திலும், உடல் எடை குறைவாகவும் இருக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவிலான யுரேனியம் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை ஒலி எழுப்பி இருக்கின்றன.

தாய்மார்களிடம் ஆய்வு நடத்திய நிறுவனம், அவர்கள் தினமும் பயன்படுத்தும் நீர் அல்லது உணவு ஆதாரங்களை நேரடியாக சோதனைக்கு உட்படுத்தவில்லை என்றாலும், பீகார் முழுவதும் 273 நிலத்தடி நீர் மாதிரிகளில் யுரேனியம் கலந்திருப்பதை முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆசிரியர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அதில், சில மாவட்டங்கள் மிக அதிக அளவு யுரேனியம் கலப்பை பதிவு செய்துள்ளன. சுபாலில் ஒரு லிட்டர் நிலத்தடி நீரில் 82 கிராம் யுரேனியம் கலந்திருப்பதாகவும், முறையே நாளந்தாவில் 77 கிராம், வைசாலியில் 66 கிராம் என்ற அளவில் உலக சுகாதார மையத்தின் 30 கிராம் என்ற வரம்பை விட அதிகமாக யுரேனியம் இருப்பு இந்த இடங்களில் உள்ள நிலத்தடி நீரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவை யுரேனியம் நிறைந்த பாறை படிமங்கள், நிலத்தடி நீரை அதிகமாக பிரித்தெடுத்தல், விவசாயத்திற்காக பாஸ்பேட் உர பயன்பாடு, தொழிற்சாலை கழிவுகள், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் போன்றவைகளால் மக்கள் இல்லங்களில் வந்து சேர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதிய ஆய்வு முடிவுகளால், தாய்மார்கள் மத்தியில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற அச்ச உணர்வும் இப்போது தொற்றிக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற விளைவுகள் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி பல வருடங்களாக போராடி வரும், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் (PMANE) ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமாரை தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டோம்.

அவர் பேசியபோது, “இதனால்தான் நாங்கள் அணு தொழில்நுட்பத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஒருபக்கம் அணு உலை, அதன் கழிவு மேலாண்மை போன்றவை ஆபத்துகள் நிறைந்ததாக இருக்கிறது. ஒருபடி மேலாக அணு உலைகளுக்கு அச்சாணியாகவும், அதற்கான மூல எரிபொருளாக இருக்கும் யுரேனியம், பன்மடங்கு ஆபத்தை விளைவிக்கும் தாதுபொருளாக உள்ளது. மிக முக்கியமாக, அணு தொழில்நுட்பம் பிறக்காத குழந்தைகள் முதல் புதிதாகப் பிறந்தவர்கள் உள்பட அனைவரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கிறது,” என்று அணு ஆற்றல் மற்றும் யுரோனியத்தின் தீமைகள் குறித்து விவரித்தார்.