சிதம்பரத்தில் குழந்தை திருமணம் நடந்தது அம்பலம்

சிதம்பரத்தில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தது தொடர்பான்ன புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க சிதம்பரம் நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று குழந்தை திருமணம் செய்வது. தீட்சிதர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் திருமண வயதை ஏட்டுவதற்கு முன்பே திருமணம் செய்வது வைப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. கடந்த 2021 ஜனவரி மாதம் சிதம்பரத்தில் ஒரு தீட்சிதரின் 13 வயது மகளுக்கு 19 வயது தீட்சிதருடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பாக தற்பொழுது சமூக நலத்துறையின் ஊர் நலத்துறை அலுவலர் சித்ரா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணம் செய்த பத்ரிசன் தீட்சிதர் மற்றும் அவரது தந்தை நாகரத்தினம், மணமகனின் அண்ணன் சூர்யா, சிறுமியின் தந்தை ராஜ கணேச தீட்சிதர் தாய் தங்கம்மாள் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் கடந்தாண்டு செப்டம்பரில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக மற்றொரு புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2 தீட்சிதர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பொய்யான குற்றச்சாட்டில் நடவடிக்கை என ஆளுநர் விமர்சித்திருந்தார். அதுமட்டுமின்றி குழந்தை திருமணம் நடைபெறவில்லை எனவும், போலீசார் மிரட்டலால் ஒப்புக்கொண்டதாகவும் தீட்சிதர்கள் கூறியிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குழந்தை திருமணம் நடக்கவில்லை என கூறியிருந்த நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.