சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்! கண் சிமிட்டும் நேரத்தில் ஏமாற்றிய கில்லாடி...

 
சேலம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பிறந்து  ஐந்து  நாட்களே ஆன ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையம் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா. வெண்ணிலா இரண்டாவது முறையாக கர்ப்பமுற்றிருந்த நிலையில், பிரசவத்திற்காக கடந்த ஐந்தாம் தேதி சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இங்கு வெண்ணிலாவுக்கு கடந்த திங்கள் கிழமை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இந்த நிலையில் வெண்ணிலாவும், குழந்தையும் அரசு மருத்துவமனிலேயே தொடர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று காலை கணவர் தங்கதுரை வெளியே சென்று இருந்த நிலையில், வெண்ணிலா மற்றும் அவருடைய தாய் இந்திராவிடம் பேச்சு கொடுத்தப்படியே, குழந்தைக்கு கண் மஞ்சளாக உள்ளது. எனவே உடனடியாக மருத்துவரிடம் காட்ட வேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார். 

இதை நம்பிய வெண்ணிலாவின் , தாய் இந்திரா , குழந்தையை தூக்கிக் கொண்டு அந்த பெண்ணுடன் சென்றுள்ளார். பின்னர் மருத்துவர்கள் இருந்த அறைக்கு அருகே சென்றவுடன், பாட்டி இந்திராவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட அந்தப் பெண் , குழந்தையை மருத்துவரிடம் காட்டி விட்டு வருவதாக கூறி,  பாட்டியை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பியுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் குழந்தையுடன் சென்ற பின் காணவில்லை என்பதால் இது குறித்து அங்கு இருந்த மருத்துவர்களிடம்  கூறியுள்ளார்.

பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சேலம் டவுன் காவல் உதவி ஆணையர் ஹரி சங்கரி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சேலை அணிந்து கொண்டு, முகத்தில் மாஸ்க் அணிந்தபடி பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வது பதிவாகி இருந்தது.  இதனை அடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த போலீசார் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி குழந்தையை கடத்தி சென்ற  பெண்ணை தேடி வருகின்றனர்.