ஆரஞ்சு எச்சரிக்கை...மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் ஆய்வு!

 
sivadoss

தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் காலை முதலே விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நாளை தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,  03.11.2023 முதல் 06.11.2023 முடிய சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. சிவதாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று (03.11.2023) ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் திரு எஸ்.கே. பிரபாகர், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் திரு சி. அ. ராமன், இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர்