மேகதாது அணைக்கு எதிரான முதல்வர் விஜயின் தனித்தீர்மானம்: சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் ஏகமனதாக ஆதரவு!

 
11

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று (ஜூன் 19), ஜூன் 22, ஜூன் 23 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என்று சட்டப்பேரவையின் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்திருந்தார். அந்த வகையில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தைக் கொண்டு வருகிறார்.

சட்டப் பேரவை நிகழ்வுகள் :

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பேரவை மீண்டும் கூடியது 

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்களான சி. ராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க ஆறுமுகம், பெ. கண்ணன் மற்றும் அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாசிக்க, அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் சி.கே.ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி மற்றும் கே.ராஜன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாற்றுத் தலைவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்திவைத்து, அரசின் சிறப்புத் தீர்மானத்தை இன்று எடுத்துக்கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அரசின் சிறப்புத் தீர்மானத்தை பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அவர் பேசுகையில், மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிவதாக கூறி, “மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தொழில் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசுக்கு இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது.

கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கக்கூடாது. அதற்கான திட்ட அனுமதியையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: காங்கிரஸ் ஆதரவு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானத்திற்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், கர்நாடகா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது எனவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, விவசாயிகள் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

கர்நாடகாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: தமிமுன் அன்சாரி 

இரு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்னை ஏற்படும் போது, ஒன்றிய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இன்றி காவிரியில் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு தொடர வேண்டும். காவரி உரிமைக்காக நாம் அனைவரும் ஓரணியில் இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டிய நிலை உள்ளது.மேகதாது அணைக்கு மாற்றாக காமராஜர் காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணலில் ஒரு அணையை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. பின் அத்திட்டம் செயல்படுத்தப்படாமல் போனது. மேகதாது அணைக்கு மாற்றாக ராசிமணலில் இரு மாநில ஒப்புதலுடன் அணையை கட்டினால் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டு விவசாயிகள் பயன்பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

அனைத்து கட்சி தலைவர்களுடன் கூட்டம் வேண்டும் - தளி ராமச்சந்திரன்

முதலமைச்சரின் தனித் தீர்மானம் மீது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி ராமச்சந்திரன், “காவிரி ஆற்றின் குறுக்கே அணையை கட்டினால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறிவிடும். ‘நாங்கள் அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாட்டுக்கு உரிமை கிடையாது’ என கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது. இது இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது.

தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளைக் கூட்டி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து, சட்டரீதியாக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எங்கள் கட்சி ஆதரிக்கிறது” என்றார்.

மேகதாது தீர்மானம்: கொ.ம.தே.க. ஆதரவு

காவிரி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் சொந்தமான நதி அல்ல; கூட்டணி தர்மத்தைவிட தமிழக உரிமை தர்மமே பெரிது என்பதை இந்த அரசு நிரூபிக்க வேண்டும் மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான விஜயின் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து கொ.ம.தே.க. எம்.எல்.ஏ. நித்தியானந்தன்.

தே.மு.தி.க. ஆதரவு

தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழக மக்களின் உரிமையை நாம் ஒவ்வொரு முறையும், அருகில் இருக்கும் மாநிலங்களிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு என்றைக்கு வரப்போகிறது? காவிரி பிரச்சினை வெகு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால் இதுவரை இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த அத்தனை பேரும் சட்டரீதியாக காவேரி நீர் பிரச்சினை தொடர்பாக போராடியுள்ளனர்.

மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவது போல், மின்மிகை நீர் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் உருவாக்க வேண்டும். தன்னிறைவு மிக்க மாநிலமாக நம் தமிழ்நாடு உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் வரும் மழைக்காலத்திற்குள் நீரை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். தேவைப்பட்டால் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக அழைத்துச்சென்று பேசி, உரிமையை முதலமைச்சர் நிலைநாட்ட வேண்டும். தேமுதிக என்றைக்கும் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்கு உறுதுணையாக இருக்கும். தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன்” என்றார்.

கர்நாடக விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் - அமைச்சர் வன்னி அரசு

முதலமைச்சரின் தனித் தீர்மானம் குறித்து பேசிய விசிக அமைச்சர் வன்னி அரசு, “தமிழகத்தின் வேளாண்மை சார்ந்த மக்களின் நலன்களின் மீது மட்டும் அல்ல; கர்நாடக விவசாயிகளின் மீதும் நமக்கு அக்கறை இருக்கிறது. அனைத்து மாநிலத்திற்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு இந்த விவாகரத்தில் தமிழ்நாட்டின் நியாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். கர்நாடக மாநிலம் காவேரி படுக்கையிலும் மேகதாது பகுதியிலும் அணையை கட்டக்கூடாது. தமிழர் உரிமை காக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என்று தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

காவிரி உரிமைகளை இழந்துவிட கூடாது

மதிமுக ராஜேந்திரன் தீர்மானம் மீது பேசுகையில், “தமிழ்நாட்டில் உரிமை சார்ந்த பிரச்சினையில் கவனமாகவும், கண்ணும் கருத்துமாகவும் இருக்கிறோம். நம்முடைய உரிமையை பாதுகாக்கிறோம் என்று மாநில அரசுக்கு உணர்த்தும் வகையில் முதலமைச்சரின் தீர்மானத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்கிறேன்.

15.85 ஹெக்டேர் சாகுபடி பாசனப் பரப்பு காவேரி டெல்டா பகுதியில் தரிசாக கிடைக்கிறது. திமுக, அதிமுக மாறி மாறி நிலைநாட்டியிருக்கக்கூடிய காவிரி உரிமைகளை இழந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஒன்றிய அரசு கர்நாடகாவா? தமிழ்நாடா? என்று வரும்பொழுது கர்நாடகா அரசின் பக்கம்தான் சாய்ந்துள்ளது என்பதை அறிந்து நாம் செயல்பட வேண்டும்” என்று கூறினார்.