பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்..! விஜய் அடுக்கிய 5 முக்கிய கோரிக்கைகள்!

 
1

முதல்வர் விஜய் எழுதிய கடிதத்தில், " ‘விக்சித் பாரத்—ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமிண்) [VB-GRAMG]’ திட்டத்தின் செயலாக்கம் 01.07.2026 அன்று முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய திட்டத்தின் நிதிப்பகிர்வு முறை மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள், மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கூடுதல் நிதிச் சுமையையும், செயல்பாட்டுரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தும். எனவே ‘VBGRAMG சட்டம், 2025’-இன் சில விதிகளில் முக்கிய மாற்றங்களும் தளர்வுகளும் அவசியமாகிறது.

அவ்வாறு செய்யாவிடில், இத்திட்டத்தை கள அளவில் தடைகளின்றி திறம்பட செயல்படுத்துவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சார்ந்துள்ள மக்களை இது கடுமையாகப் பாதிக்கும்.

மேலும், நிதிப்பகிர்வு முறையை பொறுத்தவரை, தற்போதைய வழிகாட்டுதல்களின்படி ஊதியம், கட்டுமானப் பொருட்கள் (Material) மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகிய அனைத்திற்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 60:40 என்ற வீதம் கட்டாயமாக்குகின்றன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) கடந்த இரண்டு தசாப்தங்களாக வேறுபட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வந்த நிலையில், இந்த திடீர் மாற்றம் மாநில கருவூலத்திற்கு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்.

அதன் காரணமாக ஊதியம் மற்றும் வேலை நாட்கள் குறைய வாய்ப்புள்ளதுடன் பிற அத்தியாவசிய நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறையக் கூடும். எனவே, ஊதிய மற்றும் நிர்வாகச் செலவுகளைப் பொறுத்தவரையில் ஒன்றிய அரசின் 100% நிதியுதவியைத் தொடர வேண்டும். கட்டுமானப் பொருட்கள் கூறுகளை ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே 75:25 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மேலும், இந்த திட்டத்தில் கிராம ஊராட்சிகளை வகைப்படுத்துவதற்கும், மாநில அளவிலான நிதி ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ள ஒன்றிய அளவிலான வழிமுறைகளில், மிக நுட்பமான நிர்வாக மேலாண்மையினை (Micromanagement) கொண்டு வருவதுடன் நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கணக்கீடு அடிப்படையிலான அணுகுமுறை என்பது தொடர்புடைய மாநிலத்தின் சமூகப் பொருளாதார பன்முகத் தன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறும்.

இது அடிமட்ட அளவில் சமச்சீரற்ற நிதியொதுக்கீட்டிற்கு வழிவகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் உள்ளூர் மற்றும் கள அளவிலான தேவைகளின் அடிப்படையில், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வுக்கென தனிப்பட்ட வழிமுறையை உருவாக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

மேலும் முக்கிய வேளாண் பருவங்களை (Peak agricultural seasons) அறிவிப்பதிலும், கள அளவில் கூடுதல் நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதால் இந்த சட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் முதன்மை விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களை உள்ளடக்கிய 60 நாட்களை மாநில அரசு நிலையானதாக அறிவிக்க வேண்டும் என்றும், அக்காலகட்டத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.

இச்சட்டம் ஒன்றிய அரசின் ஊரக வீட்டு வசதித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க (Convergence) அனுமதிக்கும் அதே வேளையில், மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படும் வீட்டுவசதித் திட்டங்களை விலக்கி வைப்பதாக உள்ளது. மேலும், பின்தங்கிய கிராமப்புற மற்றும் பழங்குடியின சமூகங்கள் கண்ணியத்துடன் வாழ்வதை நோக்கமாக கொண்டு, "அனைவருக்கும் வீடு" என்பதை தமிழ்நாடு அரசு ஒரு முதன்மை நோக்கமாக கொண்டுள்ளதால், VB-GRAMG கட்டமைப்பின் கீழ் மாநில வீட்டு வசதித் திட்டங்களையும் சேர்த்து, இந்நலத்திட்ட இலக்குகளை கணிசமாக விரைவுபடுத்தி, அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய உதவ வேண்டும்.

மேலும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து தேசிய அளவில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது, இந்த முக்கிய மாற்றங்களுடன், இத்திட்டத்தை மேலும் சிறப்பாக தொலைநோக்குடன், அதிகளவு உள்ளூர் மக்கள் பயன்பெறும் வகையிலும், கிராமப்புற மேம்பாட்டில் தீவிரக் கவனத்துடனும் செயல்படுத்த முடியும். எனவே இந்த முன்மொழிவுகளை பிரதமர் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.