இன்று மீனாட்சி கோவிலில் முதல்வர் விஜய் தரிசனம் : உறுதிமொழி வாங்க முடிவு..!
முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக இன்று மதுரை வருகிறார். தனிவிமானத்தில் காலை 11:00 மணிக்கு வரும் அவரை கட்சி தொண்டர்கள் வரவேற்க விமான நிலைய ரோட்டின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
திறந்தவெளி காரில் நின்று வரவேற்பை முதல்வர் ஏற்றுக்கொள்கிறார். ரிங் ரோடு வழியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்து, தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை துவக்கி வைக்கிறார். மதியம் ஒரு மணியளவில் ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து மதிய உணவுக்கு சர்க்கியூட் ஹவுசிற்கு செல்கிறார். செல்லும் வழியில் ஏதாவது ஒரு அரசு அலுவலகத்திற்கு 'விசிட்' செல்லலாம் என்பதால் தயார் நிலையில் இருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வுக்கு பின் மாலை 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. முதல்வர் வருகையையொட்டி மதியம் முதல் அவர் புறப்படும் வரை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும். அம்மன், சுவாமி சன்னதியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த முதல்வர் விஜயிடம் உறுதிமொழி எழுதிவாங்கப்பட உள்ளது.
கோயில் தரப்பில் கேட்டபோது, ' மாற்று மதத்தினர் உறுதிமொழி எழுதிக்கொடுத்துவிட்டு தரிசனம் செய்யலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முதல்வரிடம் 'ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உண்டு' என உறுதிமொழி எழுதி வாங்கப்படும் அல்லது அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெறப்படும்' என்றனர். அதேசமயம் மீனாட்சி கோயிலுக்கு முதல்வர் வருவது அவரது முடிவு என்றும், இதுவரை மதுரையில் அரசு மருத்துவமனை, காந்தி மியூசியம் நிகழ்ச்சி மட்டுமே முதல்வர் பயணத்திட்டத்தில் உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மதுரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலை 5:00 மணிக்கு முதல்வர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

