குழந்தைகள் தினம் - கொளத்தூரில் கொண்டாடுகிறார் முதலமைச்சர் விஜய்..!
மறைந்த இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக நவம்பர் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம்.
முதலமைச்சர் விஜய் குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கேக் கொள்முதல் செய்யப்பட்டது.
அதன்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 62 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்குவதற்கான பணிகள் தொடங்கின. 45 கிராம் எடையுள்ள கேக் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. கேக்குடன் முதலமைச்சரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டையும் கொடுக்கப்பட உள்ளது.
சென்னையில் அரசு, மாநகராட்சி பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள் 890 செயல்பட்டு வருகின்றன. அங்கு படிக்கின்ற சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது.
குழந்தைகள் தினத்தையொட்டி கேக் வழங்கும் புதிய திட்டத்தை த.வெ.க. அரசு புதிதாக செயல்படுத்துவதால் இதனை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.
குழந்தைகள் தின விழா சனிக்கிழமை விடுமுறை தினத்தில் வருவதால் நாளை இத்திட்டத்தை தொடங்கி வைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நவ.14-ல் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கொளத்தூரில் உள்ள பள்ளியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகள் தினம் கொண்டாட திட்டமிட்டுள்ளார். நாளை கொளத்தூர் தொகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெறும் குழந்தைகள் தின விழாவில் முதலமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.

