முதல்வர் விஜய் ஷாக்..! தவெகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி..!
ட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட சத்யபாமா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதனைத் தொடர்ந்து தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிலையில், சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாஜி எம்எல்ஏ-க்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டு, தவெக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
மேலும், மதுராந்தகத்தைத் தொடர்ந்து காலியாக உள்ள விராலிமலை, கரூர் உள்ளிட்ட மற்ற 5 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி தேர்தல் அறிவித்தால் தவெக சார்பில் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ-க்களுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என இந்த இரண்டு வேட்பாளர்களின் அறிவிப்பு மூலம் தெரியவருகிறது. இதனால் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கும் முன்னர் இருந்தே கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவெக மீதும் அக்கட்சி தலைமை மீதும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட குண்டடம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய செயலாளராகச் செயல்பட்டு வந்த பன்னீர்செல்வம், அக்கட்சியிலிருந்து விலகித் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற பன்னீர்செல்வம், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
அவருடன் தவெக துணை ஒன்றிய செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் இரட்டை இலை முகாமிற்குச் சென்றுள்ளனர். தாராபுரம் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த தவெக நிர்வாகிகள் மொத்தமாக விலகி அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளது, அப்பகுதியில் தவெகவின் பலத்தைப் கணிசமாகக் குறைக்கும் என்றும், இது அக்கட்சிக்குக் கிடைத்த பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த இணைப்பு நிகழ்வில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்பட்டாலும், 90 சதவீதம் பேருக்கு மேல் தாராபுரம் தவெக உறுப்பினர்கள் தான் அதிமுகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

