பார்ட்டி பண்ட் ஆதாரத்தை திரட்ட முதல்வர் விஜய் உத்தரவு! சட்டப்பேரவையில் உதயநிதியின் வாயை அடைக்க மாஸ்டர் பிளான்
கடந்த கால ஆட்சியில் டாஸ்மாக் மற்றும் பிற அரசுத் துறைகளில் இருந்து பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் முறைகேடாகச் சுருட்டப்பட்டதாக முதல்வர் விஜய் கடுமையான குற்றச்சாட்ட முன்வைத்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாக சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், ஆதாரங்கள் இல்லாமல் பொத்தாம்பொதுவாகப் பேசக்கூடாது. தகுந்த சான்றுகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவின் இந்த மறுப்பைத் தொடர்ந்து, வழக்கமான அரசியல் மேடை விவாதமாக இதை விட்டுவிடாமல், சட்டப்பூர்வ ஆதாரங்களுடன் களமிறங்க விஜய் முடிவு செய்துள்ளார்.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை வெறுமனே வாய்மொழி குற்றச்சாட்டாக விடாமல், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அவையில் அதிகாரப்பூர்வ அறிக்கையாகச் சமர்ப்பிக்க முதல்வர் விஜய்திட்டமிட்டுள்ளதார். இதற்காக, தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள் மற்றும் நிதி, மதுவிலக்குத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் நேரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாய் எங்கு, எப்படித் திருப்பப்பட்டது, ஒப்பந்தப் புள்ளிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வசூலிக்கப்பட்டத் தொகைகள் தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் கோப்புகளை உடனடியாகத் திரட்டுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட்டில் தொடங்கவுள்ள தமிழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர், மிகுந்த அரசியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமர்வின் போது, எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்க தவெக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதன் மூலம் எதிர்க்கட்சியின் வாயை அடைக்க வியூகம் அமைத்து வருகிறார். இதனால் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் காரசாரமான விவாதங்களும், அரசியல் மோதல்களும் வெடிக்கும் என்பது உறுதி.

