சிப்காட்டில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு: அரை கிலோமீட்டர் தூரம் புதிய ரெனால்ட் டஸ்டர் காரை ஓட்டி அசத்தல்!
தமிழகத்தின் மிக முக்கிய தொழில்துறை மாவட்டங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் விளங்கி வருகிறது. ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மாம்பாக்கம், வல்லம்-வடகால் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பேட்டைகள் இங்கு இருக்கின்றன.
ஆட்டோமொபைல், மின்னணு உற்பத்தி, கண்ணாடி தயாரிப்பு, இயந்திர உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொழிற்பேட்டைகளில் இயங்கி வருகின்றன.
இதன் மூலம் லட்சக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மாம்பாக்கத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் விஜய் இன்று வருகை தந்தார்.
தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவுகள், நவீன தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு நடைமுறைகள், உற்பத்தி செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன், ஏற்றுமதி நடவடிக்கைகள், எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள், தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் தொழிலாளர் நலத் திட்டங்கள் குறித்து நிறுவன நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, நிறுவன வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்திய முதல்வர், கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டிருந்த நினைவுப் பலகையில் தனது கையெழுத்தையும் பதிவு செய்தார்.
பின்னர், தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து கலந்துரையாடிய அவர், அவர்களுடன் நினைவுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். தொழிற்சாலை வளாகத்திற்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆய்வின்போது தொழிலாளர்களின் பாதுகாப்பு, தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் செயின்ட்-கோபைன் நிறுவனம், 350 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது.
இந்தியாவில் கட்டுமானம், வாகன உற்பத்தி, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான உயர்தர கண்ணாடி தயாரிப்புகளை வழங்கி வரும் இந்நிறுவனம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் கட்டிடங்களுக்கான உயர்தர ஃப்ளோட் கண்ணாடி (Float Glass), ஜன்னல்கள் மற்றும் கட்டிட முகப்புகளுக்கான ஆர்க்கிடெக்சுரல் கண்ணாடி (Architectural Glass), வெப்பத்தைக் குறைக்கும் சோலார் கண்ணாடிகள் (Solar Control Glass), சக்தி சேமிப்பை மேம்படுத்தும் லோ-இ (Low-E) கண்ணாடிகள், வாகனங்களுக்கான ஆட்டோமொபைல் கண்ணாடிகள் உள்ளிட்ட பல வகைகளில் கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.
முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த உற்பத்தி வளாகத்தில் உலகத் தரத்திலான தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப பரிசோதனை வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தி முறைகள், மின்சாரம் மற்றும் எரிசக்தி சிக்கன தொழில்நுட்பங்கள், கண்ணாடி கழிவுகளை மறுசுழற்சி செய்து மூலப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நவீன அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, இந்த கண்ணாடி தொழிற்சாலைக்கு வந்த முதலமைச்சர் விஜய்யை காஞ்சிபுரம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சருமான எஸ்.பி.கே. தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.
முதலமைச்சரின் வருகையையொட்டி சுங்குவார்சத்திரம்–மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரெனால்ட் - நிஸான் கார் உற்பத்தித் தொழிற்சாலையில் ஆய்வு: செயின்ட்-கோபைன் தொழிற்சாலையை தொடர்ந்து ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையிலும் தமிழக முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
கார் உற்பத்திக்கான உதிரி பாகங்களைக் கொண்டு பொருத்தும் பிரிவு, தரம் உறுதிப்படுத்தும் பிரிவு ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். பின்னர், நீண்ட சோதனைப் பாதைக்கான (Long Test Track) புதிய ரக ரெனால்ட் டஸ்டர் வாகனத்தைத் தாமாகவே முன்வந்து அவ்வளாகத்தில் உள்ள தடம் 3 மற்றும் 4 வழியாக அரை கிலோமீட்டர் தூரம் இயக்கி முதஸமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆலை, ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். மேலும், முதலீட்டின் மூலம் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் சுமார் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர்.

