முதல்வர் விஜய் படத்தில் ஹீரோ தான்..ஆனா நிஜத்துல வில்லன்.." - திமுக மாணவரணிச் செயலாளர் வீரமணி விமர்சனம்..!

 
1

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகிக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து, புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தினர். டெல்லி காவல்துறையின் இந்த கொடூர செயலைக் கண்டித்து நாடு முழுவதும் இருந்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் பெருகி வருகிறது.

அதே நேரம், மத்திய அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்கவும் வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பிக்கள் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். இவர்கள் குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், டெல்லி மாணவர் போராட்டத்தை ஆதரித்தும், நீர் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் தமிழ்நாடு கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாணவர் அணியுடன் இணைந்து இவர்கள் நடத்தி வரும் போராட்டம் 4வது நாளாக தொடர்ந்து வருகிறது.

மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க இளைஞரணி செயலாளர் வீரமணி நேற்று மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “முதலமைச்சர் விஜய் படத்தில் மட்டும்தான் ஹீரோவா இருப்பார்; நிஜத்தில் வில்லனாக இருப்பார். எப்படி இவரை நம்பி ஓட்டு போட்டார்கள்?

இவர் வந்தவுடனே அப்படியே நாட்டை திருத்திடுவார்; மாத்திடுவார் என நம்பினார்கள் இல்லையா? அதை அப்படியே தோலுரித்து காட்டக்கூடிய ஒரு விஷயம்தான் சென்னையில் போராட்டிய மாணவர்களை கைது செய்த சம்பவம்” என விமர்சித்தார்.

மேலும், “ஆர்ப்பாட்டம் என்றால் அதை காது கொடுத்து கேட்பதற்கு கூட முடியாமல் ஒன்றிய பாசிச பா.ஜ.க-வும், தமிழ்நாடு த.வெ.க அரசும் இருக்கிறது. என்ன காரணத்திற்காக இன்று இவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்?

மாணவர்களை ஈவு இரக்கமின்றி லத்தி கொண்டு அடிக்கிறார்கள். இது மிகுந்த மனவேதனைக்குள்ளான ஒரு விஷயம். இதனை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

நீட் தேர்விற்கு எதிராக எங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றாலும், அதற்கு நம்முடைய ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக் கொள்வதற்கான திமுகவின் தலைவர் எங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். தொடர்ந்து மாணவர் அணியும், தமிழ் மாணவர் மன்றமும் எங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நீட் தேர்வை எதிர்த்து நாங்கள் குரல் கொடுப்போம்” எனத் தெரிவித்தார்.