'வெற்றி தறி' விற்பனை நிலையங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!

 
1

1905- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07- ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுக் கூறும் வகையிலும், கைத்தறி நெசவாளர்களின் சேவையைப் போற்றும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 07- ஆம் தேதி 'தேசிய கைத்தறி நாள்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆகஸ்ட் 07) நடைபெற்ற 'தேசிய கைத்தறி நாள்' கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாரம்பரிய உடையான வேட்டி, சர்ட்டை அணிந்து கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள 'வெற்றித் தறி' விற்பனை நிலையங்களை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். அத்துடன், கைத்தறி விற்பனை நிலையங்களையும், கண்காட்சியையும் அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், 2025-2026ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தேர்வுச் செய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு ரூபாய் 22.25 லட்சத்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

இந்த கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்திச் செய்யும் உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் பட்டுப் புடவைகள், கோயம்புத்தூர் கோரா பருத்திச் புடவைகள், நெகமம் பருத்திப் புடவைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உள்ளிட்ட பல்வேறு கைத்தறித் தயாரிப்புகளும், பிற மாநிலங்களின் தந்துஜா, மிருக்ணாயினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்பெற்ற கைத்தறித் தயாரிப்புகளும் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் அமைச்சர்கள் மதன் ராஜா, ஸ்ரீநாத், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் துறைச் சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கலைவாணர் அரங்கம் வந்த முதலமைச்சரை வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்த்து கையசைத்து உற்சாக வரவேற்பளித்தனர்.