வளர்த்த கட்சியே கைவிட்ட போது வாரி அணைத்தவர் முதல்வர் விஜய்..! – சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உருக்கம்!

 
1

பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் சட்டமன்றத்தில் இன்று தனது பதிலுரையை வழங்கினார். அமைச்சர் பதிலுரை வழங்குவதை அவருடைய தந்தை தனபால் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கண்டார். அவரை தற்போதைய சபாநாயகர் வரவேற்றார்

இதனை தொடர்ந்து பேசிய பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்,
"பல வரலாற்றுச் சிறப்புகளை இந்த மாமன்றம் பார்த்துள்ளது. பல ஆளுமைகளையும், சான்றோர்களையும், பல அறிவாளிகளையும், பல உன்னதத் தலைவர்களையும் பார்த்துள்ளது. அந்த வகையில், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா, கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் ஒருசேர உருவமாக இருக்கும் ஓர் உன்னத தலைவர்தான் எங்கள் வெற்றித் தளபதி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். அவர் இருக்கும் திசையை நோக்கி வணக்கம் செலுத்தி எனது உரையைத் தொடங்குகிறேன்.

ஒருவர் வீட்டில் சமைத்த உணவை, உண்ண மறுத்துவர்கள் மத்தியில், அந்த ஒருவரை தமிழ்நாட்டிற்கே கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அமைச்சராக அமர்த்தி அழகு பார்த்தவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.
அதே நபரை, தாங்கள் அமர்ந்திருக்கும் இந்தப் பேரவைத் தலைவர் பதவியில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் இந்த பதவியில் ஒரு முறை அல்ல இருமுறை அமர்த்தி அழகு பார்த்தவர் புரட்சித் தலைவி அம்மா

தாய் 8 அடி பாய்ந்தால், பிள்ளை 16 அடி பாயும் என்று சொல்வார்கள். எங்கள் அண்ணா 16 அல்ல, 128 அடி பாய்ந்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவருக்கு பேரவைத் துணை தலைவர் பதவியையும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த 8 பேருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் உன்னதத் தலைவர் எங்கள் வெற்றித் தளபதி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.

பட்டியலின சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக கருதப்படும் அருந்ததியர் சமுதாயத்திலிருந்து வந்த எனக்கு, குறிப்பாக நிலம் மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்திலிருந்து வந்த எனக்கு, நிலம் சம்பந்தப்பட்ட பத்திர பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பதவி கொடுத்து உயரிய அந்தஸ்தையும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் எங்கள் வெற்றித் தளபதி அவர்கள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சட்டமன்றத்திற்குள் உள் நுழைந்தால் அவையில் இருக்கும் அனைவரும் எழுந்து நிற்கும் சமூக நீதியின் அடையாளமாக, இரண்டு முறை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர் என்னுடைய தந்தை. வளர்த்த கட்சியே அவரையும், என்னையும் கைவிட்ட நிலையில் வாரி அணைத்துக்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தளபதி அவர்களுக்கு, எனது குடும்பத்தாரும், நானும், எனது குழந்தைகளும், நன்றியோடும் விசுவாசத்தோடும் இருப்போம்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான முன்னேற்றம் என்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றம் மட்டும் அல்ல சமூகநீதியின் வெற்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என பலர் வாய்கிழிய பேசினாலும் அதை நிருபித்து காட்டியவர் மகத்தான தலைவர் முதல்வர் அவர்கள். மக்களை முறையாக நீதியுடன் காத்து ஆட்சி செய்பவனே மக்களுக்கு இறைவன் போன்றவன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் நலத்திட்டங்கள், கட்டமைப்பு மேம்பாடுகள் போன்ற நிதி ஆதாரங்களுக்கு வணிகவரித்துறை முக்கியத்துவமாக இருந்து வருகிறது. அமைப்பு ரீதியான சீர்திருத்தம் மற்றும் பல்வேறு வகையில் சீர்திருத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. மேலும் வணிகவரி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வணிக வரி பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.

பொதுமக்களுக்கு எளிதான சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்பட்டு வருகிறது இணையவழி மூலம் எளிதில் பத்திர பதிவு நடைபெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எந்த ஒரு பரிவர்த்தனையும் சட்டபூர்வமாகவும் எந்த ஒரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு உறுதி செய்கிறது. கால தாமதம் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு அண்ணா குழு அமைக்கப்படுகிறது. பொதுமக்கள் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றி அதன் மூலம் சரிபார்க்கும் நடைமுறையானது எளிமையாக்கப்படுகிறது" என்றார்.