2 நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை சிங்கப்பூர் செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய், அபுதாபி நாடுக்கு சென்றது.
அப்போது 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் வரை 207 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , 2 நாள் பயணமாக நாளை ( செவ்வாய்கிழமை ) சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். அவருடன் தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்கின்றனர். அங்கு 24-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதற்காக முன்னதாக, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு செல்கிறார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.