புதிய விமான நிலைய இடத்தை முதல்வர் அறிவித்திருக்க வேண்டும்: அண்ணாமலை..!

 
1

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக அறிவித்த CM விஜய், புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை அறிவித்திருக்க வேண்டும் என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். புதிய இடத்தை தேர்வு செய்து மத்திய அரசின் ஒப்புதலை பெறவே தமிழக அரசுக்கு சுமார் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்றும், தற்போது சென்னை விமான நிலையம் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் இன்று அறிவித்துள்ளார். மாற்று இடங்கள் பரிசீலனையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டாலும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமையவுள்ள இடத்தைக் குறிப்பிட்டிருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். ஏனெனில், புதிய விமான நிலைய இடத்தை தீர்மானிப்பதற்கு காலம் தாழ்த்தினால் அது மாநிலத்தின் வளர்ச்சியைக் 10 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும்.


பரந்தூருக்குப் பதிலாக வேறொரு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க அரசு விரைவில் முடிவெடுத்தாலும், அதற்கான இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலைப் பெறுவது. ஒப்பந்தப்புள்ளிகளை வெளியிடுவது, நிலத்தைக் கையகப்படுத்துதல், உரிமங்களைப் பெறுதல் என அனைத்தும் முடிந்து விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதற்கிடையில் மற்ற மாநிலங்கள் முன்னேறிச் சென்று நம்மைப் பின்தங்கச் செய்துவிடும்.

இன்றைய தரநிலைகளின்படி சென்னையில் உள்ள தற்போதைய விமான நிலையம் போதுமானதாக இல்லை. சென்னைவிமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவுதான். ஆனால் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கர் பரப்பளவையும், பெங்களூர் 4,000 ஏக்கர், நவி மும்பை 2,866 ஏக்கர், தில்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவையும் கொண்டுள்ளது. ஆனால் சென்னையில் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் போக்குவரத்தைப் பெறுவது என்பது சிரமமாக உள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் நுழைவாயிலாக சென்னை இருந்தது. இன்று ஆண்டுக்கு 3 கோடி பயணிகளுடன் சென்னை விமான நிலையம் 5-வது இடத்தில் உள்ளது. தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகியவை முதல் 4 இடங்களில் உல்ளன.

போதுமான டாக்ஸிவேக்கள், ஏரோபிரிட்ஜ்கள் இல்லாததால், சென்னை விமான நிலையம் 'கோடு எப்' விமான நிலையமாக வகைப்படுத்தப்படவில்லை; இதனால் A380 போன்ற பெரிய ரக விமானங்களை இங்கு தரையிறக்குவது சாத்தியமற்றதாக உள்ளது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை, பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களால் மட்டுமே பெரிய ரக விமானங்களைக் கையாள முடிகிறது.

எனவே, சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்திற்கு ஏற்ற இடத்தை அரசு விரைந்து அறிவிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். அரசுகள் மாறலாம். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்கள் திரும்பிப் பார்க்கும்போது, அன்றைய அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லாததால் உருவான விமான நிலையம் என நினைத்துவிடக் கூடாது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான செய்திகளின்படி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குத் தேவைப்படும் 5,746 ஏக்கர் நிலத்தில் 1,700 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது. கையகப்படுத்தப்பட்ட இந்த நிலத்தை மாநில அரசு இப்போது என்ன செய்யத் திட்டமிட்டுள்ளது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.