9 வயது சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் ராஜசேகருக்கு ’அண்ணா வீர விருது’ வழங்க முதல்வர் உத்தரவு
நாகர்கோவில் கடலில் 9 வயது சிறுவனை கடல் அலைகளில் சிக்கிருந்தபோது உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு சேவையாளர் ராஜசேகருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்ணா வீர விருது வழங்க உத்தரவு அளித்துள்ளார்.
19.05.2026 அன்று காலை சுமார் 09.45 மணியளவில், நாகர்கோவில் லெமூரியா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த கணபதிபுரத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் 9 வயதுடைய வைஷ்ணவி என்ற சிறுமியை மட்டும் பொதுமக்கள் காப்பாற்றிய நிலையில், 9 வயதுடைய சிறுவன் சைலேஷ் கடலுக்குள் சுமார் 100 மீட்டர் தொலைவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், தனது இரவுப் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த நாகர்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு ஓட்டுநர் திரு ஆர்.ராஜசேகர் மேற்படி தகவலை கேள்விப்பட்டவுடன் இராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு, உடனடியாக கடற்கரைக்கு விரைந்து சென்று அங்கிருந்த உயிர்காக்கும் மிதவையை பயன்படுத்தி, தன் சொந்த பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல், கடலில் நீந்தி சென்று அச்சிறுவனை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்து அச்சிறுவனின் உயிரை காப்பாற்றினார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அன்னாரது துணிச்சலான செயலை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். இவரின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இவருக்கு "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்

