இன்று ‘அன்புச்சோலை’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!
புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெறும் அரசுநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். இதில் ரூ.767 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைக்கிறார். பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், மூத்த குடிமக்களின் வாழ்வை மேம்படுத்த, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் ‘அன்புச் சோலை’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது. திருச்சியில் இன்று பகல் 12.30 மணி அளவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இந்த புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
இந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்படும் ‘அன்புச்சோலை - முதியோர் மனமகிழ் வள மையங்கள்’ திட்டம் மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் கவனம் செலுத்தும் வகையில் சமூக மையங்களாக செயல்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் தலா 2 மையங்கள், தொழில் துறைமாவட்டங்களான ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சென்னைமாநகராட்சியில் தண்டையார்பேட்டை, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் என மொத்தம் 25 அன்புச்சோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படுகின்றன. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா, நூலகம் மற்றும் முதியோருக்குத் தேவையான திறன் மேம்பாடு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழக அரசின் நிதியுதவியுடன், மூத்த குடிமக்களின் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் கொண்ட அன்புச்சோலை மையங்கள் பகலில் மட்டும் செயல்படும். இந்த பராமரிப்பு மையங்களில், முதியோர் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். இந்த அன்புச்சோலை மையத்துக்கு முதியோர் சென்றுவர ஏதுவாக, போக்குவரத்து வசதியுள்ள இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் "முதியோர்கள்தான் சமுதாயத்தின் வழிகாட்டும் சக்தி. இன்றைய தமிழ்நாட்டை உருவாக்க தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்கள் கண்ணியத்துடனும், பராமரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதை உறுதி செய்வது எமது கடமை.
அன்புச்சோலை மையம் மூத்த குடிமக்கள் நலன் கருதி பல்வேறு அம்சங்கள் கொண்டு, தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் மையமாகச் செயல்படும். ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்புச்சோலை மையங்களுக்கு முதியோர்கள் சென்றுவர போக்குவரத்து வசதியுள்ள இடங்களில்தான் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன.
அன்புச்சோலை மையங்களுக்கு வருகை தரும் முதியவர்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்பட்டு முதியோரின் விரிவான பராமரிப்பு உறுதி செய்யப்படும்.
அன்புச்சோலை மூலமாக, முதியோர் குடும்பப் பிணைப்பைத் தொடர்ந்தே, பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ளதாக பகல் நேரங்களைக் கழிக்க முடியும். இது, கருணைமிக்க மற்றும் சமூக நீதியினை உள்ளடக்கிய தமிழ்நாட்டிற்கான எமது அரசின் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

