'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்..!
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்துள்ளார். இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை ஏற்கனவே அமைத்துள்ளார். இந்த குழுவில் கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரங்களை சேகரித்து அதில் 'வீக்கான' தொகுதிகளையும் பட்டியல் எடுத்து வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்ட சபை தொகுதி வாரியாக தி.மு.க.வினரை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து விசாரித்து வருகிறார். தொகுதியை மேலும் வலுவாக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதுவரை 70 தொகுதிகளுக்கும் அதிகமாக ஆய்வு செய்துள்ளார். இதன் அடுத்த கட்டமாக வாக்குச்சாவடி முகவர்களுக்கு (பி.எல்.ஏ.2) தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட மண்டல அளவில் பொறுப்பாளர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி சென்னைக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவும், தென் மண்டல தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் ஒவ்வொரு மண்டலத்துக்கும் அமைச்சர்களை நியமித்துள்ளார். இவர்கள் பாக முகவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இப்போது 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பயிற்சி கூட்டத்தை மாமல்லபுரத்தில் 28-ம் தேதி நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த பயிற்சி கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நகரப் பகுதி பேரூர் கழக செயலாளர்கள் இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தி.மு.க.வின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளை காஞ்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னின்று செய்து வருகிறார்.


