அரிட்டாபட்டி மக்களை சந்திக்க மதுரை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
s

அரிட்டாபட்டி மக்களை சந்திக்க மதுரை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான உரிமையை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றியிருந்தது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவ.7ல் வெளியாகியது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் குடைவரை கோயில், சமணர் படுகை, சிற்பங்கள், தமிழ்ப் பிராமி எழுத்துகள் என்று வரலாற்று சின்னங்களும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசுகையில், நான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை இந்த திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என்று முழங்கினார். இருப்பினும் போராடி வந்த மக்கள், மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்து அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போதும் கூட Save அரிட்டாப்பட்டி என்ற பதாகைகள் ஏந்தினர். இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் மேலூரில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது

இந்நிலையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாபட்டி மக்கள் நன்றி தெரிவிக்கவுள்ளனர். அரிட்டாபட்டி மக்களின் அழைப்பை ஏற்று இன்று நடைபெறும் நன்றியறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதற்காக சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.