ரூ.353 கோடியில் கட்டப்பட்ட உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

புதிதாக, ரூ.353 கோடியில் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மலை மாவட்டமான நீலகிரி மக்கள் நீண்ட காலமாக அரசு மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவ மனை வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஏற்ப உதகை அருகே பிங்கர்போஸ்ட் பகுதியில் 499 கோடி நிதி ஒதுக்கபட்டு முதற்கட்டமாக அரசு மருத்துவ கல்லூரி 2022-ஆம் ஆண்டு திறக்கபட்ட நிலையில் 143 கோடி மதிப்பில் மருத்துவமனை, 200 கோடி மதிப்பில் மருத்துவமனை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 10 கோடி மதிப்பிலான உபகரணங்கள் என மொத்தம் 353 கோடி மதிப்பில் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனை கட்டி முடிக்கபட்டுள்ளது.
அதனை தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவிற்கு வந்த முதலமைச்சருக்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சாலையின் இருபுறமும் நின்று வரவேற்றனர். மருத்துவவமனை வளாகத்திற்கு வந்த முதல்வரை வரவேற்று தோடர், குரும்பர், இருளர், கோத்தர் இன பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனமாடி உற்சாக வரவேற்றனர். அவர்களின் கலாச்சார நடனத்தை கண்டு ரசித்த முதல்வர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து பின்னர் மருத்துவமனையை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு சென்று பார்வையிட்ட அவர் பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு பொறுத்தபட்டுள்ள அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ஆன CT scan மற்றும் MRI scan ஆகியவற்றை பார்வையிட்டார். முன்னதாக பழங்குடியின மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இந்தியாவிலேயே சிம்லாவிற்கு அடுத்ததாக மலை பிரதேசத்தில் திறக்கபட்டுள்ள இந்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை 40 ஏக்கர் பரப்பளவில் 3 லட்சத்தி 20 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கதாகும்.