செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..!

 
1

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை ஆர். வைஷாலி பல்வேறு சர்வதேச செஸ் போட்டிகளில் கலந்துகொள்வதுடன், அதில் வெற்றிகளையும் பதிவு செய்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் சைப்ரஸில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதிப்பெற்று அசத்தியுள்ளார்.

மேற்கொண்டு ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுப் பெருமையை வைஷாலி பெற்றுள்ளார். இதனையடுத்து நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் ஜூ வென்ஜூனை எதிர்த்து விளையாடும் வாய்ப்பையும் வைஷாலி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஃபிடே மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்.வைஷாலிக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நிதியுதவி வழங்கியுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைஷாலி சர்வதேச அளவிலான அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை ஆதவ் அர்ஜுனா வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பில்,"தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சர்வதேச மற்றும் உலக அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வெல்ல தேவையான பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திறமையான விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் விளையாட்டு போட்டிகளுக்குரிய தேவை அடைப்படியிலான உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெற்றியாளார்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 20 வயதுக்குட்பட்ட தேசிய அளவிலான தங்கப் பதக்கம் வென்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்குத் தலா ரூ.4 இலட்சம் வரை தேவை அடிப்படையிலான உதவிகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், வெளிநாட்டில் பயிற்சி மற்றும் போட்டி தொடர்பான செலவுகளுக்கு இந்த நிதி உதவுகிறது.

மேலும் பன்னாட்டு அளவிலான போட்டிகளுக்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட வீரர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. விளையாட்டுக் கருவிகளும் பொருட்களும் வாங்குதல், வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி பெறுதல், பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்றல் போன்றவற்றிற்கு இந்த நிதி உதவுகிறது.

அதேபோன்று தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஒலிம்பிக் போட்டிகளிலும், ஏனைய பன்னாட்டு அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு, அவர்களின் தேவை அடிப்படையிலான உதவியை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒருவருக்கு ஆண்டொன்றிற்குத் தலா ரூ. 30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாக சர்வதேச செஸ் போட்டிகளில் பங்கேற்று வரும் வைஷாலிக்கு, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று சர்வதேச மற்றும் உலகளவிலான போட்டிகளில் வெற்றிபெறும் முனைப்போடு தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நம் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சஜ்ஜன்சிங் ரா சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.