சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி 'வள்ளலார் நெடுஞ்சாலை' - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

 
1 1

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 'அனைத்துலக வள்ளலார் மாநாடு - 2026' சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்தது. மாநாட்டு திடலில், வள்ளலார் புகைப்பட கண்காட்சி மற்றும் மூலிகை கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின், சன்மார்க்கர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர் பேசியதாவது: உலகிற்கு அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில், மக்கள்நலத் திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. இம்மாநாட்டின் வாயிலாக சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

* அனைத்துலக வள்ளலார் மாநாடு நடந்ததை குறிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படும்

* வடலுாரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும். அந்த பள்ளியில், திருவருட்பா இசைப்பயிற்சி அளிக்கப்படும்* வடலுாரில், வள்ளலார் பெயரில் மூலிகை தோட்டம் அமைக்கப்படும்

Advertisement

* ஸ்பிரிச்சுவல் அல் - கெமி என்ற வள்ளலார் புத்தகம், அறநிலையத்துறை பதிப்பகம் வழியே வெளியிடப்படும்

* வள்ளலார் பிறந்த நாளையொட்டி, ஆண்டுதோறும், மூன்று நாட்கள் விழா நடத்தப்படும்

* மேட்டுக்குப்பம், மருதுார், கருங்குழி ஆகிய இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்

* கடலுார் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் அமைக்கப்படும் பூங்காவுக்கு, 'வள்ளலார் பூங்கா' என பெயர் சூட்டப்படும்

* சென்னையில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்தில், வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையின் பெயர், 'வள்ளலார் நெடுஞ்சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் பலகையை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

வடலுாரில் கட்டப்பட்டுள்ள வள்ளலார் சர்வதேச மையம் பகுதி -2 கட்டங்கள்; திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்; சித்த மருத்துவ மையம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி போன்றவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.