திடீரென சென்னை - இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு..!
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றன. இதனிடையே வரும் 15ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண்பதற்காக தற்போது சென்னையிலிருந்து இலங்கை செல்வதற்கு விமானங்களில் நிறையப்பேர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விமான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை- இலங்கை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் ரூ.7,127. ஆனால் 13 ஆம் தேதி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சாதாரண (எக்கனாமி) வகுப்பிற்கான கட்டணம் ரூ.22,073 முதல் ரூ.25,207 வரையும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணம் ரூ.42,231 வரையிலும் அதிகரித்துள்ளன. அதேபோல், வரும் 14ஆம் தேதி சென்னை- இலங்கை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள் ரூ.20,708 முதல் ரூ.25,207 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டணங்கள், ரூ.35,217 வரையிலுமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
போட்டி நடக்கும் நாளான 15 ஆம் தேதி இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.18,283 முதல் ரூ.19,464 வரையிலும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரூ.28,660 முதல் ரூ.42,231 வரையிலும் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானங்களில் கட்டணமானது கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

