சென்னை: சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்
சாலையில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் நடைமுறையை இன்று முதல் சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சென்னை காவல்துறை மற்றும் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து, சாலையோரங்கள், நடைபாதைகள் மற்றும் தெருக்களில் பழுதடைந்த நிலையிலும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நீண்ட காலமாக கேட்பாரற்கு நிற்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யும் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
மோட்டார் வாகனச் சட்டம் 380ன்படியும், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 128ன்படியும் அப்புறப்படுத்தி, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் மாநகராட்சிப் பகுதிகளில் இதுவரை 1,308 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்களின் வாகனங்களை அப்புறப்படுத்திட ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு அப்புறப்படுத்தப்படாத கைவிடப்பட்ட வாகனங்களை இன்று முதல் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தி பள்ளிக்கரணையில் நிறுத்தப்பட உள்ளது. வாகனங்கள் அப்புறப்படுத்தும் பணிகளை மேயர் பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பேட்டியளித்த மேயர் பிரியா, உரிய ஆவணைங்களை காண்பித்து உரிமையாளர்கள் வாகனங்களை எடுத்துச்செல்லலாம். அவ்வாறு குறிப்பிட்ட அவகாசத்தில் உரிமைக் கோரப்படாத வாகனங்கள் ஏலம் விடப்படும் என தெரிவித்தார்.