சென்னையில் 2 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் தகவல்..
சென்னையில் 2 நாட்களுக்கு 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரையில் 40.2 ° செல்சியஸ் பதிவானதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (16.09.2024) முதல் செப்.22 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலையாக ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.