ஒரே இரவில் 185 ரவுடிகளை தட்டித்தூக்கிய சென்னை போலீஸ்..!

 
1

கடந்த செப்.05- ஆம் தேதி இரவு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கண்ணன் (வயது 45) ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, செப்.09- ஆம் தேதி இரவு திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜ் (வயது 29) என்பவர் மர்மக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தொடர் கொலை சம்பவங்கள் காரணமாக, சென்னை வாழ் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்ததுடன், அச்சமடைந்தனர். சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

இதையடுத்து, சென்னை மாநகரில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணியை காவல்துறைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் அனைத்து காவல் மாவட்டங்களிலும், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல்துறையின் நேற்றிரவு (செப்.10) ரவுடிகளின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் பெருநகர சென்னை காவல் நிலையங்களில் சரித்திரப் பதிவேட்டில் உள்ள 185 ரவுடிகளை அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அதேபோல், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பிடியாணை நிலுவையில் உள்ள தலைமறைவு குற்றவாளிகள் குறித்தும், காவல்துறையினர் தகவல்களைச் சேகரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடிகள் மற்றும் முக்கிய குற்றவாளிகளின் நடவடிக்கைகளையும் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சிறப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில ரவுடிக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.