ரயில் மறியல் போராட்டம் நடத்திய விசிக-வினர் மீது வழக்குப்பதிவு
சென்னை சைதாப்பேட்டையில் அமித் ஷாவை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 55 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை கைது செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விசிகவினர், தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமித்ஷாவைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தலைமையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான விசிகவினர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அமித்ஷாவை கண்டித்து நேற்று போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உட்பட 55 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.