தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணம்...ஆன்லைன் ரம்மியில் இழப்பு - இளைஞர் தற்கொலை

 
suciden

சென்னை சைதாப்பேட்டையில், தனது தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ். சூதாட்டத்திற்கு அடிமையான இவர் லட்சக்கணக்கான பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விளையாட பணம் இல்லாததால் தனது தாய் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி அதனையும் இழந்துள்ளார். இதனால் தனது தாயின் சிகிச்சைக்கு பணத்திற்கு என்ன செய்வது என தெரியாமல் மன வேதனை அடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். 

இந்த நிலையில், விரக்தியில் இருந்த ஆகாஷ், வீட்டின் மொட்டை மாடியில் இருந்த அறையில், கேபிள் வயரில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டூர்புரம் போலீசார் ஆகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தாயின் கேன்சர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.