ஓனர் வீட்டிலிருந்து 250 சவரன் நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஓட்டுநர்

 
Robbery

சென்னை எம்.ஆர்.சி. நகரில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எம்.ஆர்.சி.நகர் சத்திய தேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சொந்த வீட்டுக்குள் சென்று வருவது போல் உரிமையுடன் சென்று வருவார் சரவணன். அந்த அளவுக்கு உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் இவர் மீது நம்பிக்கை வைத்திருந்தார்.


இந்நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27-ஆம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நிறுத்தினார். வழக்கத்திற்கு மாறான அவரது நடத்தையை சந்தேகித்து, வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை. இதையடுத்து ஒரு டெக்னீசியனை வர வைத்து லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்த 250 சவரன் தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்கள், 25 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி  சம்பவம்..!

தனது வீட்டில் டிரைவராக பணியாற்றிய சரவணன் மீதுதான் சந்தேகம் இருக்கிறது என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அசோக் நகரை சேர்ந்த டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.