சென்னை பெருநகர எல்லை 5,904 சதுர கி.மீட்டராக விரிவாக்கம்..!!

 
govt

சென்னை பெருநகர பகுதியின் நிர்வாக எல்லையை 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவுப்படுத்தி அரசாணையை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அப்பகுதிகளுக்கான நீண்டகால ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்காக ரூ. 45.50 கோடி நிதியையும் ஒதுக்கீடு செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த தொகையானது 2026-2027 நிதியாண்டில் ரூ. 10 கோடி, 2027- 2028 நிதியாண்டில் ரூ. 22 கோடி, 2028- 2029 நிதியாண்டில் ரூ. 13.50 கோடி என பிரித்து வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை 1,189 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த கூடுதல் பகுதிகள் இணைக்கப்பட்டு, சென்னை பெருநகரப் பகுதியானது 5,904 சதுர கிலோமீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்?

இந்த விரிவாக்கப்பட்ட பகுதியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சியை ஏற்படுத்தவும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப திட்டமிடவும் விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சர்வதேச அளவில் நகர்ப்புற திட்டமிடல் ஆலோசனை நிறுவனத்தை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) திட்டமிட்டுள்ளது.

இந்த மாஸ்டர் பிளானில் போக்குவரத்து, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், வீட்டுவசதி, குடிநீர் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு, கடலோரப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.

ஏற்கெனவே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் பிற துறைகள் மேற்கொண்ட ஆய்வுகளையும், இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்பில் ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ. 65.48 கோடி செலவாகும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முன்மொழிந்த நிலையில், தமிழ்நாடு அரசு தற்போது ரூ. 45.50 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

மூன்று குழுக்கள் அமைப்பு

இந்த மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணிகளைக் கண்காணிக்கவும், ஆலோசனை நிறுவனத்தின் பணிகளை ஆய்வு செய்யவும், மூன்று குழுக்களை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்காக பெறப்படும் ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க டெண்டர் ஆய்வுக் குழு, ஆலோசனை நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கைகளை பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்க நிபுணர் ஆய்வுக் குழு, மாஸ்டர் பிளான் தயாரிப்புப் பணிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவதுடன், பல்வேறு அரசுத்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள உயர்நிலைக் கண்காணிப்புக் குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

இந்த உயர்நிலைக் குழுவுக்கு தலைமைச் செயலாளர் தலைவராகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலாளர், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிதித்துறை, தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்டத் துறைகளின் உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.