தீபாவளியை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்!
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை ஒட்டி சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொலைதூரங்களைக்கூட குறுகிய நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதால் மெட்ரோ ரயில்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது குறுகிய இடைவெளிக்குள் ரயில்கள் இயப்படுவதால் மக்கள் கூட்ட நெரிசலின்றி பயணம் மேற்கொள்ள முடிகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதன்படி நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சென்னையில் 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 2 வழித்தடங்களில் 6 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாகவும், பயண்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.