"நாங்கள் கொண்டு வந்த திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் மேயர் தடுக்கிறார்னு Proof காட்ட முடியுமா?" - சென்னை மேயர் பிரியா
எதைக் கேட்டாலும் ஆதாரம் காட்டு என்கிறீர்கள். எனது மேஜையில் எந்த ஃபைலாவது நிலுவையில் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, “ஆதவ் அர்ஜுனா அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். இதுவரை என்னுடைய மேஜைக்கு வந்து எந்தக் கோப்பு நின்றிருக்கிறது? 'நாங்கள் ஆட்சிக்கு வந்து இந்தத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அது அப்படியே மேயர் டேபிளில் நிற்கிறது. எங்களைப் பணியாற்ற விடவில்லை' என்று ஆதாரத்தோடு சொல்ல முடியுமா? எல்லாவற்றுக்கும் 'ப்ரூஃப்' கேட்கிறீர்கள். ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகிறது. இவ்வளவு பெரிய மாநகரத்திற்கு நிதி ஒதுக்காமல், திட்டங்களை செயல்படுத்தாமல், எங்கள் தலைவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா மட்டும்தான் நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இதுவரை ஒரு செங்கல்கூட நீங்கள் வைக்கவில்லை.
சட்டப்பேரவையில் அவைக்குறிப்பிலிருந்து கருத்துகளை நீக்கினால், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது யோசிப்பார்கள், 'நாம் என்ன தவறாக பேசினோம்?' என்று. ஆனால், தவெகவினர் அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார்கள். மேயர், துணை மேயர்களை குறை கூறுவதை விடுத்து, மக்களுக்கு என்ன தேவை என்பதை பாருங்கள்.இன்று ஆட்சியில் உள்ளவர்கள் 100 நாட்கள் கொண்டாட்டம் என மேடை போட்டுப் பேசும்போதுகூட என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் திமுகவை குறை சொல்கிறார்கள். 100 நாட்களில் என்ன செய்தோம் என்று அவர்கள் சொல்லவில்லை. 100 நாட்களில் எத்தனையோ சாதனைகளைச் செய்யலாம். ஆனால், ஒன்று கூட இவர்கள் செய்யவில்லை.” என்றார்.

