“எங்கள 7 மணி ஆகியும் விடுவிக்கல... முதல்வரின் உத்தரவுக்காக போலீஸ் காத்திருக்கிறது”- மேயர் பிரியா
த.வெ.க அரசை கண்டித்து தி.மு.க மாணவர் அணி நடத்த முயன்ற போராட்டத்தைத் தடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மாலை 7 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் விடுவிக்கவில்லை என மேயர் பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் டி.சரத்குமார் , போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளதை கண்டித்தும் இச்செயலில் ஈடுபட்ட மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமாரை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, திமுக தலைவர் உத்தரவின்படி தி.மு.க. மாணவர் அணிச் சார்பில், இன்று (29.6.2026) தமிழகம் முழுவதும் கழக மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் என ஆயிரக்கணக்கணகானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க காலையில் இருந்து தி.மு.க போராட்டம் நடத்தியும் அரசு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. த.வெ.க அரசை கண்டித்து தி.மு.க மாணவர் அணி நடத்த முயன்ற போராட்டத்தைத் தடுத்து, கைது செய்யப்பட்டவர்களை மாலை 7 மணிக்கு மேல் ஆகியும் இன்னும் விடுவிக்கவில்லை. தனியார் மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள பெண்களுக்குக் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை. முதலமைச்சரிடம் இருந்து உத்தரவு வரவில்லை எனக் கூறி காவல்துறை காலதாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அமைச்சருக்கு எதிராக தாங்கள் போராட்டம் நடத்தியும் அரசு அதை கண்டுகொள்ளவில்லை” என்றார்.

