"சென்னை நம் குழந்தை மாதிரி.. தூய்மை பணியாளர்கள்தான் அதற்கு அம்மா..!" - குட்டிக்கதை சொன்ன உதயநிதி..!!
இது முடிவு அல்ல, இது தான் ஆரம்பம் எப்படி பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கே.என்.நேரு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகஸே் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது விழா மேடையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து ஊடகங்களிலும் மழை குறித்தான பேச்சுகள் தான் இருந்தது. சென்ற ஆண்டு ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்தது. இந்தாண்டு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறை அமைச்சர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மழை பெய்தாலும் மூன்று மணி நேரத்திற்கு எங்கும் தண்ணீர் நிற்க கூடாது என உத்தரவிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். எப்போதும் இது போன்ற காலத்தில் நாங்கள் களத்தில் இருந்துள்ளோம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்.
ஒரு குழந்தையை அம்மா காலையில் குளிக்க வைத்து வெளியே அனுப்புவார்கள். ஆனால் அந்த குழந்தை வீட்டிற்கு வரும் போது அந்த குழந்தை சேறும் மண்ணுமாக வீட்டிற்கு வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோவம் வரும். ஆனால் அது செல்ல கோவம் . பின்னர் அந்த குழந்தை என்று சொன்னது ‘சென்னை’யை ; அம்மா என்று சொன்னது தூய்மை பணியாளர்கள்களான உங்களைத்தான்” என்று குட்டிக்கதை கூறினார்.
பின்னர்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “மழை பெய்த 12 மணி நேரத்தில் அதன் சுவடே தெரியாத அளவிற்கு பணியாற்றி உள்ளனர்.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும். இது முடிவு அல்ல இது தான் ஆரம்பம். எப்படி பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்” என தெரிவித்தார்.