"நீங்க எப்படி அதிமுக பொதுச்செயலாளர்னு போடலாம்"- ஐகோர்ட் கேட்டதும் மன்னிப்பு கோரிய ஈபிஎஸ் தரப்பு

 
edappadi palanisamy

அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Highcourt

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ep


இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அதிமுக பொதுச்செயலாளர்  தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கேள்வி எழுப்பினார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மனுவை எப்படி பதிவுதுறையில் பதிவு செய்தீர்கள் என உயர் நீதிமன்ற பதிவு துறைக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, திருத்த மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.