சீமான் வீட்டு பாதுகாவலர்கள் ஜாமின் வழக்கு - காவல்துறை பதில் அளிக்க உத்தரவு!

சீமான் வீட்டு பாதுகாவலர்கள் ஜாமின் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்துக்குச் சென்ற போலீஸார், சம்மனை ஒட்டிச் சென்றனர். இதனிடையே, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவருக்கும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமல்ராஜ் மற்றும் சுபாகர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், சீமான் வீட்டு பாதுகாவலர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சீமான் வீட்டு பாதுகாவலர்கள் ஜாமின் கோரிய மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் வீட்டு கதவில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக, கைதான இருவரும் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணை மார்ச் 13க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.